மார்கழி மாதம், பனிக்காலம். அந்த அதிகாலை பனி உடலுக்கு நல்லது என்று, இந்த கலர் கோலம் போடும் வேலை போல. ஆண்களை போன்று பெண்கள் வெளியே செல்வது இல்லை .அதனால் வீட்டு வாசலில் அவர்களை கொஞ்சம் அதிக நேரம் இருக்க வைக்க ஆரம்பிக்கப்பட்டதாக இருக்கும்.
அந்த மாதம் மட்டும் அப்பாவை ஐந்து மணிக்கு எழுப்பி விட சொல்லி , கலர் கோலம் போடுவோம். பனியில் அந்த கொசு கடியில் வேலை நடக்கும். முடிந்தும், தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சென்று கோலம் பார்த்து அதில் பிடித்த கோலத்தை மனப்பாடம் செய்து, வீட்டிற்கு வந்ததும் கோல நோட்டில் போட்டு வைத்து பின்னர் ஒரு நாள் வாசலில் போடுவோம்.
வருடம் செல்ல செல்ல , பனி அதிகமாக உள்ளது, கொசு கடி என்று சொல்லி காலை கலர் கோலம் இரவு கலர் கோலம் ஆனது. பல நேரம் பெரிய கோலம் போட அம்மாவை தான் கூப்பிடுவேன், கலர் அடிக்க நேரம் ஆகும் என்று காரணம் சொல்லி.
கலர் கோலம்
கல்லூரி படிப்பு முடிந்ததும் இந்த தினக் கோலம் ,மார்கழி கலர் கோலம் போடுவது எல்லாம் கை விடப்பட்டது. முந்தைய பதிவில் சொன்னது போல என்றாவது கோலம் போடுவது தான். பிறந்த, புகுந்த வீட்டிலும் கலர் அடிப்பது (பண்டிகை போது ) மட்டுமே. சென்னையில் நான் கலர் கோல பொடி இது வரை வாங்கியது இல்லை.
ஆனால் இந்த வருடம், தானேஷ் விரும்பியதால் , கலர் கோல மாவு வாங்கி மாலையில் வீட்டு வாசலில் போட்டோம். வழக்கம் போல மாடி வீட்டம்மா தான் கேட்டது. காலையில் கலர் கோலம் போடாம , சாயந்திரம் போடுறன்னு. கேள்வி கேட்கும் அம்மா வீட்டிலேயே சில நாள் ராத்திரி வாசல் பெருக்கி மாவு கல் அல்லது சாக் பீஸ் கோலம் போடுவாங்க. நான் பதில் கேள்வி கேட்கவில்லை.
வாசகர்கள் பார்வைக்காக எங்கள் வீடு கோலம்
என்னுடைய கை வண்ணத்தில் (சிகப்பு நிறம் தானேஷ் செய்தது )
தீபக் , தானேஷ் வண்ணம் தீட்டியது
நானும் பெரிய கோலம் போட்டிருக்கேன் என்பதை காட்ட ஏதும் புகைப்படம் இல்லை. அப்பொழுது எங்கள் வீட்டில் கேமராவோ , கேமரா போனோ கிடையாது.
கோலம் போடுவதும் , கலர் கோலம் போடுவதும் எனக்கு பிடிக்கும் தான். ஆனால் அதற்காக அதை என்னுடைய தினசரி கட்டாய வேலையாக அல்லது கடமையாக ஏற்க மனம் வருவது இல்லை. வாசலில் கோலம் இருந்தா தான் சாமி வீட்டுக்கு வரும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாசல் பெருக்கி , கழுவுவதோடு சரி. எனக்கு தோன்றும் தினங்களில் மற்றும் விஷேச நாட்களின் போது கோலம் போடுவேன்.
இந்த சென்னையில் என்னை கேள்வி கேட்பார் இல்லை. ஒரு வேளை பின்னாளில் நான் ஊர் பக்கம் நிரந்தரமாக தங்குவதாக இருந்தால், ஊருக்காக தினமும் கோலம் போடலாம்.
வாசல் கோலம் பதிவு நிறைவு பெற்றது
-- தானேஷ் அம்மா