Have a nice day readers...!!!
Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Friday, January 8, 2016

குட்டி குறும்பு [15] - நீ தான் என் பிரண்டு ...


என்ன ஏற்கனவே படிச்ச தலைப்பா இருக்குல்ல  ? ஆமாம்  , குட்டி குறும்பு [1] -  நீ தான் என் பிரண்டு ...

அது தாணு சொன்னது . இப்போ தீபக் சொல்றது.

என் கூட இரு , என் கூட பேசு , நீ தான் என் பிரண்டு என்று தீபக் ஒரே அன்பு தொல்லை தான். அவன் அண்ணாவும், அப்பாவும் என்கிட்டே வந்தா அவ்வளவு தான். 

இன்னும் எத்தனை காலம் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

-- தானேஷ் அம்மா

Thursday, January 8, 2015

வாசல் கோலம் - பகுதி இரண்டு




மார்கழி மாதம், பனிக்காலம். அந்த அதிகாலை பனி உடலுக்கு நல்லது என்று, இந்த கலர் கோலம் போடும் வேலை போல. ஆண்களை போன்று பெண்கள் வெளியே செல்வது இல்லை .அதனால் வீட்டு வாசலில் அவர்களை கொஞ்சம் அதிக நேரம் இருக்க வைக்க ஆரம்பிக்கப்பட்டதாக இருக்கும். 

அந்த மாதம் மட்டும் அப்பாவை ஐந்து மணிக்கு எழுப்பி விட சொல்லி , கலர் கோலம் போடுவோம். பனியில் அந்த கொசு கடியில் வேலை நடக்கும். முடிந்தும், தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சென்று கோலம் பார்த்து அதில் பிடித்த கோலத்தை மனப்பாடம் செய்து, வீட்டிற்கு வந்ததும் கோல நோட்டில் போட்டு வைத்து  பின்னர் ஒரு நாள் வாசலில் போடுவோம். 

வருடம் செல்ல செல்ல , பனி அதிகமாக உள்ளது, கொசு கடி என்று சொல்லி காலை கலர் கோலம் இரவு கலர் கோலம் ஆனது. பல நேரம் பெரிய கோலம் போட அம்மாவை தான் கூப்பிடுவேன், கலர் அடிக்க நேரம் ஆகும் என்று காரணம் சொல்லி.

கலர் கோலம் 

கல்லூரி படிப்பு முடிந்ததும் இந்த தினக் கோலம் ,மார்கழி  கலர் கோலம் போடுவது  எல்லாம் கை விடப்பட்டது.  முந்தைய பதிவில் சொன்னது போல என்றாவது கோலம்  போடுவது தான். பிறந்த, புகுந்த வீட்டிலும் கலர் அடிப்பது (பண்டிகை போது ) மட்டுமே. சென்னையில் நான் கலர் கோல பொடி இது வரை வாங்கியது இல்லை.

ஆனால் இந்த வருடம், தானேஷ் விரும்பியதால் , கலர் கோல மாவு வாங்கி மாலையில் வீட்டு வாசலில் போட்டோம். வழக்கம்  போல மாடி வீட்டம்மா தான் கேட்டது. காலையில் கலர் கோலம்  போடாம , சாயந்திரம் போடுறன்னு. கேள்வி கேட்கும் அம்மா வீட்டிலேயே  சில நாள் ராத்திரி வாசல் பெருக்கி மாவு கல் அல்லது சாக் பீஸ் கோலம் போடுவாங்க. நான் பதில் கேள்வி கேட்கவில்லை. 

வாசகர்கள் பார்வைக்காக எங்கள் வீடு கோலம் 




என்னுடைய கை வண்ணத்தில் (சிகப்பு நிறம் தானேஷ் செய்தது )



தீபக் , தானேஷ் வண்ணம் தீட்டியது 

நானும் பெரிய கோலம் போட்டிருக்கேன் என்பதை காட்ட ஏதும் புகைப்படம் இல்லை. அப்பொழுது எங்கள் வீட்டில் கேமராவோ , கேமரா போனோ  கிடையாது. 


கோலம் போடுவதும் , கலர் கோலம் போடுவதும் எனக்கு பிடிக்கும் தான். ஆனால்  அதற்காக அதை என்னுடைய தினசரி கட்டாய வேலையாக அல்லது கடமையாக ஏற்க மனம் வருவது இல்லை. வாசலில் கோலம் இருந்தா தான் சாமி வீட்டுக்கு வரும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாசல்  பெருக்கி , கழுவுவதோடு சரி. எனக்கு தோன்றும் தினங்களில் மற்றும் விஷேச நாட்களின்  போது கோலம் போடுவேன். 

இந்த சென்னையில் என்னை கேள்வி கேட்பார் இல்லை. ஒரு வேளை பின்னாளில் நான் ஊர் பக்கம் நிரந்தரமாக  தங்குவதாக இருந்தால், ஊருக்காக தினமும் கோலம் போடலாம்.

வாசல் கோலம் பதிவு நிறைவு பெற்றது 

-- தானேஷ் அம்மா 





Wednesday, January 7, 2015

குட்டி குறும்பு [14] - எனக்கு மீசை வேணும்



இந்த குறும்பு தீபக் செய்தது. அப்பா மாதிரியே தானும் பேன்ட் ஷர்ட் போடணும். பாக்கெட்ல பேனா வச்சுக்கணும் . கூலிங் கிளாஸ் போடணும்னு சேட்டை தான்.

ஒரு நாள் இரவு தூங்க செல்லும் முன், தானேஷ் அப்பா , தீபக்கிற்கு முத்தம் கொடுத்தாரு. அப்பா முகத்தையே உற்று பார்த்தவன் , அழ ஆரம்பிச்சுட்டான். ஏன் தம்பி அழற என்று கேட்டதற்கு அழுதுகொண்டே "அப்பா கிட்ட இருக்க மாதிரி எனக்கு இது இல்லைன்னு " மீசையை தொட்டு காண்பித்தான். 

அதன் பெயர் கூட தெரியாது. எங்களுக்கு சிரிப்பு தான் வந்தது. இது மீசை. நீ வளர்ந்ததும் வரும். அண்ணாக்கும் இல்லை பாரு என்றோம்.
சமாதானம் ஆகி தூங்கினான். அடுத்த நாள் காலை , அப்பாவிடம் ஓடி , தொட்டு காட்டி இது பேர் என்ன என்றான். மீசை என்றதும், மறுபடி எனக்கு மீசை வேணும் புராணம் ஆரம்பித்தான். நீ வளர்ந்ததும் வரும் என்றோம். இப்பவே வேணும் என்றான்.  என் மீசையை எடுத்துக்கோ என்றதும் பிடித்து இழுக்க ஆரம்பித்து விட்டான். உடனே விலகி, இது வராது , நீ வளர்ந்ததும் உனக்கும் வரும் என்றார். அவனை சமாதனப்படுத்த, மை பென்சில் மூலம் மீசை வரைந்து கண்ணாடியில் பார்க்க சொன்னோம். அது அவனுக்கு பிடிக்க வில்லை.அழிக்க சொல்லி விட்டான்.

ஒரு வாரம் முழுதும் அப்பாவை பார்க்கும் போது  , எனக்கு மீசை வேணும் என்பது கண்டிப்பாக இருக்கும். ஒரு வழியாக பின்னர் அந்த கேள்வி நின்றது.

-- தானேஷ் அம்மா

வாசல் கோலம்


காலை , மாலை ரெண்டு வேளையும் வீட்டு வாசலில்  கோலம் போடுவதை தமிழ் நாட்டில, பல வீடுகளில் இன்னைக்கும் ஒரு கடமையா செய்து வருகிறார்கள் 

எனக்கு  தெரிந்து வாசல் கோலம் இரு வகை . புள்ளி வைத்தது , புள்ளி வைக்காதது. புள்ளி  வைத்த கோலம், மேலும் இரு பிரிவு கொண்டது. சிக்கு கோலம் மற்றும்  பூ அல்லது படக் கோலம் 

புள்ளி வைக்காத கோலம் 

புள்ளி வைத்த கோலம் (சிக்கு கோலம் )

புள்ளி வைத்த கோலம் (படக்  கோலம் )


புள்ளி வைத்த கோலத்திலும்  நேர் புள்ளி ,ஊடு புள்ளி என்று இரு வகை கோலம் உண்டு.

 கோலத்துக்கும் எனக்கும் ஒரு காலத்தில் (பள்ளி  பருவத்தில் ) சம்பந்தம் இருந்தது. கோல  புத்தகம் , கோல நோட்டு கையுமா  இருந்திருக்கேன். கொஞ்ச காலத்திற்கு தினமும் காலை மாலை என இருவேளையும் வாசலில் கோலம் போடுவது என் கடமைகளில் ஒன்றாக இருந்தது. 

பாக்யராஜ் சார் படத்தில தாங்க , வயசு பொண்ணுங்க குளித்து , பளிச்சுன்னு உடை மற்றும் தலை கொண்டை (மறக்காம கொண்டைய சுத்தி துண்டு ) போட்டு காலை ஐந்து மணிக்கே கோலம் போடுவாங்க. அந்த கோலத்தை பார்க்க பார்க்க ஹீரோ(?) வருவாரு, அதுவும் சைகிளில்.அதை பத்தி பேச ஆரம்பிச்சா தலைப்பு மாறி போயிடும். கோலத்துக்கு வருவோம்.

என்னுடைய காலை கோலம்  என்றால் , ஐந்து மணி எல்லாம் கிடையாது. பல நேரம் அது ஏழு மணியாக தான் இருக்கும். பல பேருக்கு அது பள்ளி கூடம் அல்லது வேலைக்கு செல்லும் நேரம். அவர்கள் நான் கோலம் போடுவதை பார்க்கும் போது, கோவமாக வரும்.அனாலும் என்னால் சீக்கிரம் எழுந்து , குளித்து ரெடியாகி கோலம் போட முடிந்தது இல்லை. 


கோலம் போடு என்று என் அம்மா சொன்னால் , அது மூன்று உள் வேலை  கொண்டது. வாசல் பெருக்க (விளக்கமாறு  / துடைப்பம் கொண்டு  கூட்டுதல் ), நீர் தெளித்து கழுவுதல் , கோலம் போடுதல்.

 லீவில்  ஊருக்கு  போனா  பாட்டி , "முத்தம் தெளிச்சியா?" ன்னு கேட்பாங். ஊருக்கு ஊரு இந்த பேச்சு மாறும். இன்னமும் நாகர் கோவில் பக்கம் எல்லாம் இப்படித்தான் கேப்பாங்க. உண்மையில் முற்றம் (வாசல்) என்னும்  வார்த்தை  தான் கால போக்கில் மாறி முத்தம் ஆயிற்று. 


சென்னை வந்ததும் , ஒரு அம்மா வந்து கேட்டது. "முறை வாசல் செய்ய ஆள் வேண்டுமா ? " எனக்கு புரிய வில்லை. அப்படின்னா என்ன என்று கேட்டேன். காலை மாலை இரு வேலையும் கோலம் போடுவதை தான் முறை வாசல் என்று சொல்கிறார்கள் என்று விளக்கம் அறிந்தேன். "முறை  வாசல்"  என்பது "முத்தம் தெளித்தல்" என்பதை விட தேவலை என்று தோன்றியது. 

நாகர்கோவிலின் சுத்த தமிழ் கால போக்கில் கலப்படம் ஆனதை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்.

அந்த காலத்தில் பச்சை அரிசி மாவில் கோலம் போட்டதாக சொல்கிறார்கள். நான் கோலம் போட்டது சுண்ணாம்பு கல்லில் இருந்து பொடி செய்யப்பட்ட மாவில் தான். மண்ணில் இருக்கும் எறும்பு போன்ற ஜீவன்களுக்காக பச்சை அரிசி மாவு  கலந்து மண் தரையில் கோலம் போடுபவர்களும் உண்டு.ஆனால் இப்பொழுது பல வீடுகளில் வாசல்  சிமெண்டு தரை தான். மொசைக் தரையாக இருப்பின் பலர் கோலம் பெயிண்ட் செய்து விடுகிறார்கள் அல்லது கோல  ஸ்டிக்கர் வாங்கி ஒட்டி விடுகிறார்கள்.


இன்றும் , நாங்கள் குடி இருக்கும் வீடும், தெருவில் இருந்து  உள்ளே இருப்பதால் நான் கோலம் போடுவது இல்லை. தோன்றினால் சில நேரம் மாலையில் போடுவேன். கோலம் போட்டு பழக்கம் இருந்தாலும் என்னுடைய கோலங்கள் என்றும் முழுமையான திருத்தத்துடன் இருந்ந்தது இல்லை. நோட்டில் போடுவது போன்று அழகாக வந்தது இல்லை. அதுவும் நான் கோலம் போட தயங்க காரணம்.  

சென்னையில் பல வீடுகளில் கோலம் போடுவது "அவுட் சோர்ஸ்" செய்யபடுகிறது. எனக்கு இது ஒன்றும் புதிது அல்ல. ஏனெனில்  எங்கள் வீட்டிலேயே பாத்திரம் விளக்கும் அம்மாவிடம் அந்த வேலை பின்னர் கொடுக்கப்பட்டது. நான் சந்தோஷம் அடைந்த நேரம் அது . பலர் பார்க்க ஏழு மணிக்கு கோலம் போட தேவை இல்லை. இருந்தும் மார்கழி மாதம் முழுவதும் கோலம் போடுவது எங்களுடையது. 

இந்த பதிவு  மிக நீளமாக போவதால் மார்கழி கோலம் பற்றிய பதிவை அடுத்ததாக, வாசல் கோலம் - பகுதி இரண்டு - ஆக  போடுகிறேன்.

-- தானேஷ் அம்மா

Monday, November 3, 2014

'துப்பாக்கி'யா, 'கத்தி'யா



நேத்து கத்தி படம் பார்த்தேங்க... படத்த பத்தி கமெண்ட் சொல்லனும்னா அது மொன்ன கத்தி தாங்க. 

துப்பாக்கி ஹிட் ஆனதாலே கதிரேசன்  கத்தி-யானார், இருந்தாலும் வெறும் டைட்டில் வச்சு படம் ஓடுறது இல்லியே...

நான் படத்த பத்தி பேச வரலைங்க...படம் பார்த்த இடத்தை பத்தி தாங்க பேச வந்தேன்...

சென்னைல, "வான நடை" மாலில் உள்ள தியேட்டர்ல தாங்க படம் பார்த்தோம்.  ஒரு டிக்கெட் 120 ரூபாய் . டிக்கெட் கவுன்ட்டர்ல பாக்ஸ் புல்லா 10 ரூபாய் சாக்லேட் வச்சிருக்காங்க . மூணு டிக்கெட் கேட்டு 500 ரூபாய் கொடுத்தா மீதி 140 ரூபாய் தராம , 120 ரூபாய் , இரண்டு  10 ரூபாய் சாக்லேட் தராங்க. சாக்லேட்  வேண்டாம் பணம் தாங்க என்றால் , சில்லறை இல்லை 60 ரூபாய் கொடுங்க என்கிறார். சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கினோம் .

டிக்கெட் காண்பித்தால் தான் , தியேட்டர் உள்ளே விடுவார்கள். உள்ளே ஏகப்பட்ட செக்யூரிட்டி செக்கிங் . பெண்களுக்கு தனி செக்யூரிட்டி செக். ஹன்ட்பாக் செக் பண்ணனும் என்றார்கள் . 


நான் கூட துப்பாக்கி , கத்தி இருக்கானு செக் பண்றாங்கன்னு நினைச்சேன். அனால் கேமரா , ஸ்நாக்ஸ் இருக்கான்னு கேட்டாங்க. இல்லைன்னு சொன்னதும் விட்டுட்டாங்க. 

குழந்தைகளுடன் செல்வதனாலும் பிஸ்கட் கூட அனுமதிப்பது இல்லை. அட்லீஸ்ட் வாட்டர் பாட்டில் அனுமதிக்கிறார்கள், அதுவும் குழந்தைகளுடன் சென்றால். 

சின்ன  வயசுல அப்பா அம்மா கூட , 70 எம் எம் ல படம் பார்க்க போகும்போது ஒரு கவர் நிறைய தீனி கொண்டுபோவோம் . அதை தீர்த்துட்டு பிரேக் டைம்ல அப்பா கிட்ட  பாப்கார்ன் , சம்சா , முறுக்கு எல்லாம் வாங்கி வர சொல்லுவோம். நம்ம ராஜ்கிரண் பாடுறது போல "அது  ஒரு அழகிய கனா காலம்..." தாங்க...

ஆனா , இப்போ உள்ளே ஸ்நாக்ஸ்  அனுமதிப்பது இல்லை (டிக்கெட் விற்பவன் கொடுக்கும் சில்லறை(?) சாக்லேட் தவிர). உள்ளே விற்கும் ஒரு பாப்கார்ன் கப்  150 ரூபாய் . ஒரு பப்ஸ் 70 ரூபாய் 

எதிர்காலத்தில், டிக்கெட் வேணும்னா , ஸ்நாக் கண்டிப்பா வாங்கனும்னு சொல்லுவாங்க போல. 

டிக்கெட் வாங்குவதில்  இருந்து , உள்ளே விற்கும் ஸ்நாக் என்று எல்லா இடத்திலும் , நம்மிடம் இருந்து பல மடங்கு பணம் பெறுகிறார்கள். ஆனாலும் நாம் ஏதோ இலவச  சேவை பெறுவது போல கஸ்டமர் கவனிப்பு. 

உன்னை யாரும் இங்க வர சொல்லலை. நீயா தான் வந்த. இஷ்டம் இருந்தா இரு, இல்லனா போ அப்படிங்கற நிலை தான். ஆனாலும் கூட்டம் அள்ளுது பெரிய ஸ்க்ரீன்ல படம் பார்க்குறதுக்கு.


-- தானேஷ் அம்மா  


Tuesday, October 14, 2014

குட்டி குறும்பு [13] - பாட்டி உன் வயசு என்ன ?



லீவில் ஊரில் இருந்த  போது , தானேஷ் , பாட்டியிடம் "பாட்டி உன் வயசு என்ன ?"  என்று கேட்டான் .

நான் ஆர்வமாக இருந்தேன் . அம்மா என்ன பதில் சொல்வார்கள் என்று. உடனே பதில் வந்தது. "பொண்ணுங்க  கிட்ட வயசு  கேட்க கூடாது " 

உடனே நான் தாணுவிடம், அம்மா வயசு உனக்கு தெரியும் இல்ல என்றேன் . ஆமாம் என்றான்.

நான் பிறந்த போது பாட்டி வயசு முப்பது. இப்போ என் வயசையும் , பாட்டியின் அந்த வயதையும் கூட்டினால் , பாட்டியின் வயசு தெரியும் என்றேன் .  தாணு நோட்டு பென்சில்  எடுத்து கணக்கு போட்டு கண்டு பிடிச்சிட்டான்.

உடனே, யாரு  கேட்டாலும் , அம்மா,  பாட்டி வயசு சொல்லக்கூடாது சரியா என்றேன்.

ஷப்பா, பேபியானாலும்  பாட்டியானாலும் பொண்ணுங்க  பொண்ணுங்க தான் .


-- தானேஷ் அம்மா


Thursday, March 13, 2014

குட்டி குறும்பு [12] - சிறுவர்களும் இருட்டும்


தாணு முதல் பட அனுபவத்தின் போது நடந்தது இது . படம் ஆரம்பம் ஆகும்  முன் எல்லா விளக்கும் அணைக்கப்பட்டது. உடனே தாணு "அம்மா கரண்ட்டு போய்டுச்சு " என்று சத்தமாக சொன்னான். சுற்றி  இருந்தவர்கள் சிரித்து விட்டார்கள். 


சமீபத்தில் , மதியம்  உணவருந்த ஏ சி ஹோட்டல்  சென்றோம். தீபக் உடனே " அம்மா லைட் போடலை " என்று கூற , அனைவர் பார்வையும் எங்கள் பக்கம்.
லைட்  போட மாட்டார்கள் என்று சொன்ன பிறகே அமைதியானான்.

-- தானேஷ் அம்மா

Tuesday, December 25, 2012

குட்டி குறும்பு [11] - ஜெயலலிதாக்கு கல்யாணம்...


பைக்ல ரௌண்ட்ஸ் போகும் போது, தானேஷ் கேள்வி கேட்டுக்கிட்டே வருவாரு. எங்களுக்கு அவன் கேள்விக்கு பதில் சொல்லவே நேரம் பத்தாது. போன தடவை வெளிய போனபோது , முஹுர்த்த நாளா போச்சு.

ஒரு மண்டப வாசலில் ,  ஒரு பக்கம் கல்யாண பொண்ணு மாப்பிள்ளை போட்டோவும்  , இன்னொரு பக்கம் சி எம் போட்டோவும்  போட்டிருந்தாங்க. தானேஷ் ஒரு சைடு மட்டும் பார்த்துட்டு சொன்னான் அம்மா
"ஜெயலலிதாக்கு கல்யாணம்..."


தானேஷ் அப்பா உடனே கேட்டாரு , " மாப்பிள்ளை யாரு தம்பி ? " அது தெரியல , போட்டோ போடலை ன்னு பதில் வந்தது. 
 
"கல்யாணம் என்றாலே ஜோடியா தான்  போட்டோ போடுவாங்க. அந்த பக்கம் பாரு. இந்த பக்கம்  சி எம் போட்டோ, அவங்க வாழ்த்துக்கள் தெரிவிக்குது." அப்படின்னு சொல்லலாம்னு பார்த்தா , அதுக்குள்ள பைக் ரொம்ப தூரம் வந்திடுச்சு. சொன்னா அந்த பக்க போஸ்டரை பாக்கணும் , வண்டிய திருப்புன்னு அடம் பிடிப்பான் என்பதால் பேசாமல் இருந்துவிட்டேன்.



-- தானேஷ் அம்மா

 

Monday, December 17, 2012

குட்டி குறும்பு [10] - அம்மா ரேகை உடைஞ்சு போச்சு...


தானேஷுக்கு கொஞ்சம் பயம் அதிகம், அதுவும் ரத்தத்தை பார்த்தால் அழுதுடுவாரு. ஒரு தடவை உள்ளங்கையில் ஒரு சின்ன கீறல் காயம். மருந்து போட்டு சமாதானம் செய்தோம்.  அடுத்த நாள் மறந்துட்டாரு. அதற்கடுத்த நாள் , அழுகிற மாதிரி முகத்தை வச்சுட்டு என்கிட்ட ஓடி வந்தாரு.

என்ன ஆச்சு என்றதும் , அழு குரலில் " அம்மா ரேகை உடைஞ்சு போச்சு..." என்றான். எங்க காமி என்றதும் உள்ளங்கை விரித்து கட்டினார். அந்த காயம் சரியாகி , பழைய தோல் ஒரு நூல் போல எழுந்து நின்றது.

கையில் இருக்கும் லைன் என்னவென்று கேட்டதற்கு , ரேகை என்று சொல்லி கொடுத்ததை வைத்து, தோல் உரிவதை பார்த்தது இல்லாததால் ரேகை உடைஞ்சு போச்சு என்று சொல்லி எங்க எல்லாரையும் சிரிக்க வச்சுட்டான்.

-- தானேஷ் அம்மா

Friday, December 14, 2012

காதல் - சுவை

காதல் - சுவை  

கண்டதும் உவர்ப்பு
கனிந்ததும் இனிப்பு
ஊடலில் கார்ப்பு 
பழகியதும் புளிப்பு
வேற்றுமையில் துவர்ப்பு
தோல்வியில் கசப்பு 



-- தானேஷ் அம்மா

Saturday, November 3, 2012

குட்டி குறும்பு [9] - ஏன் , எதற்கு , எப்படி ...

   ஏன் , எதற்கு , எப்படி ... என்கிற கேள்விகள் , தானுவிற்கு  எப்பவும் பிடித்தவை..

  சமீபத்தில் அவன் கேட்ட கேள்விகள் சில.

1 அம்மா கோவில்ல சாமி ஏன் எப்பவும் பாட்டு கேட்டுகிட்டே இருக்கு ?
        *** எல்லா கோவில்லயும் ஸ்பீக்கர்ல பாட்டு போட்டிருந்தார்கள் ***

2  ஏ சி பஸ் , ஏ சி கார் மாதிரி ஏன் பைக்ல ஏ சி இல்லை ?
        *** பைக்ல போகும் போது வெயில் தாங்க முடியலையே பா  ***

3  நான் பாட்டி தாத்தா வீட்டுக்கு போயிருந்த போது நீயும் அப்பாவும் கல்யாணம் பண்ணிட்டீங்களா ?
        *** ஆல்பம்ல  தன்னோட போட்டோ இல்லியே  *** 

4 அப்பா அந்த கார் அஞ்சு ரூபா வா ,பத்து ரூபா வா இல்ல ரெண்டு ரூபா வா ?
        *** பணம் கொடுத்தாதான் பொருள் கிடைக்கும்னு கத்துகிட்டோம்ல  *** 


5 அம்மா எதுக்கு கரண்ட்டு கட் ஆகுது ?
         *** அவசியம் தெரிஞ்சுக்க வேண்டியது தான் *** 


கேள்வி கேட்குறது ஈசி , ஆனா பதில்... ரொம்ப கஷ்டம்... வேண்டாம் அழுதுடுவேன்...

-- தானேஷ் அம்மா

Wednesday, October 24, 2012

வெண் குடை




மழை நீர் துளிகள் கண்டதும்
      நீ உயிர்த்தாய்
உன் அழகு தோற்றம் கண்டதும்
      நான் சிலிர்த்தேன்


-- தானேஷ் அம்மா

Friday, October 12, 2012

குட்டி குறும்பு [8] - தாத்தா உன் வயித்துலயும் பாப்பா இருக்கா ?


தானேஷுக்கு அப்போ ரெண்டு வயசு. அவங்க அத்தைக்கு பிரசவ நேரம் நெருங்கிய சமயம். அத்தை நடப்பதை போல நடந்து காட்டி எங்களை சிரிக்க வைத்து கொண்டிருந்தான்.

வெளியில் சென்ற தாத்தா உள்ளே வந்ததும், தாத்தாவையும் அவர் வயிற்றையும் பார்த்து " தாத்தா உன் வயித்துலயும் பாப்பா இருக்கா ? " என்று கேட்டான். உள்ள பாப்பா இருக்கிறதால தான் தாத்தா வயிறும பெருசா இருக்கு என்று அவனாக புரிந்து கொண்டு கேட்டான்.

இல்ல தம்பி. கேர்ள்'ஸ் வயித்துல தான் பேபி இருக்கும் பாய்ஸ் வயித்துல வராது என்றதும் , ரொம்ப சந்தோசப்பட்டான். 


பாவம் சின்ன பையன் பயந்துட்டான் போல. எங்க தன் வயித்துலயும் இந்த மாதிரி பாப்பா வந்துட்டா என்ன பண்றதுன்னு..
 
-- தானேஷ் அம்மா

Wednesday, September 19, 2012

குட்டி குறும்பு [7] - விளையாட வா அத்தை...

 தாணு , அப்பா , அத்தை சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். வழக்கம் போல தாணு பாதி வயிறு நிரம்பியதும் எழுந்தாச்சு.

அத்தை சாப்பிட்டதும் ஊருக்கு கிளம்பனும். அதனால அத்தை சீக்கிரம் சாப்பிடு என்று சொல்லி கொண்டிருந்தான். எதுக்கு தம்பி என்றதும் , என் கூட விளையாட என்று சொன்னான்.

அப்பாவும் , அத்தையும் பொறுமையாக சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அப்பா , அத்தையிடம் சாப்பிட்டதும் கிளம்பலாம். லேட் ஆக போகுது என்றார்.

அதை கேட்டு , இரு நிமிடம் அமைதியாக இருந்த தாணு, "அத்தை அப்பாகிட்ட சாப்பிட கொடுத்துரு . அப்பா சாப்பிடட்டும். அது வரை நாம விளையாடலாம்" என்றான். 

அவனால் சாப்பிட முடியாத போது , நானோ அவன் அப்பவோ அதை சாப்பிட்டு வேஸ்ட் பண்ணாததை கவனித்து , அத்தை சாப்பிடாட்டி வேஸ்ட் ஆகிடும்னு அப்பா சாப்பிடுவார்னு சொல்லிட்டான். ஆனால் அத்தை இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லை என்பது அவனுக்கு புரியவில்லை.

-- தானேஷ் அம்மா

Wednesday, August 29, 2012

குட்டி குறும்பு [6] - பெட் , பில்லோ இருக்கா அம்மா ?

சென்ற வருடம் இதே சமயம் , தீபக் என் வயிற்றில் ஆறு மாதம். தாணுவின் சின்ன உலகத்தில், அம்மா அப்பா என்ற இருவரை தவிர மூன்றாவதாக தம்பி அல்லது தங்கை உண்டு என்பதை நாங்கள் அவனுக்கு சொல்லி கொண்டு இருந்தோம்.

உனக்கு தம்பி பாப்பா வேணுமா இல்ல தங்கச்சி பாப்பா வேணுமா என்றால் எப்பவும் தம்பி என்றே பதில் வரும். ஒரு நாள் பாப்பா என்ன பண்றாரு என்று கேட்டான். நான் பாப்பா தூங்குது. சின்ன பாப்பா இல்ல ரொம்ப நேரம் தூங்கும் என்றேன். உடனே "உள்ளே பெட் பில்லோ எல்லாம் இருக்கா அம்மா ? " என்றான்.

ஒரு விநாடி யோசித்த நான் , இருக்கு தம்பி. உள்ள மெத்து மெத்துன்னு தான் இருக்கும் என்றேன்.

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க இந்த காலத்து பிள்ளைகள்..

-- தானேஷ் அம்மா

Wednesday, August 1, 2012

குட்டி குறும்பு [5] - அம்மாக்கு வழி தெரியாது...

ஒரு வருடம் முன்பு, நாங்க வீடு மாற்றி , புது வீட்டில் வசிக்க ஆரம்பித்த சமயம் நடந்த சம்பவம்.

ஒரு நாள் மாலை, அருகில் இருக்கும் கடை செல்ல தீர்மானித போது , தாணு நடக்க மாட்டேன் , பைக்ல போலாம் என்றான். ரெண்டு தெரு தள்ளி இருக்கும் கடைக்கு பைக்கா  என்று யோசித்தவர் , சரி என்று பைக்கில் செல்ல முடிவானது.


கடை வாசலில் பார்கிங் செய்ய விரும்பாது என்னை மட்டும் அனுப்பினார். தாணு அவங்க அப்பா கூட ஒரே கதை. நான் திரும்பி வந்து பைக்கில் உட்கார்ந்ததை கவனிக்கவே இல்லை. வண்டி ஸ்டார்ட் ஆனதும் கத்த ஆரம்பித்து விட்டான்.


அப்பா , நிப்பாட்டு . அம்மா இன்னும் வரலை.
அம்மா வர லேட் பண்றால்ல, நடந்து வரட்டும் என்றார் அப்பா.
அம்மாக்கு வீட்டுக்கு வர வழி தெரியாது. கடைக்கு திரும்ப போ...
அப்படியா , பரவால்ல தம்பி நாம வேற அம்மா வாங்கிக்கலாம். வீட்டுக்கு போலாம் இப்போ என்றார்.
எனக்கு வேற அம்மா வேண்டாம் . இந்த அம்மா தான் வேணும். திரும்பி கடைக்கு போ என்றான்.

அதற்குள் வீடு வந்து விட , பின்னால் இருந்து இறங்கி அவன் முன் சென்று சிரித்தேன்.


தாணு என்னை பார்த்த பார்வை.. பைக்ல அமைதியா உட்கார்ந்துட்டு , என்னை டென்ஷன் படுத்திட்ட இல்ல என்பது போல இருந்தது..

-- தானேஷ் அம்மா 

Sunday, July 22, 2012

குட்டி குறும்பு [4] - நானும் வரேன் பரீட்சைக்கு...

இரு மாதம் முன்பு, அத்தை ஒரு நாள் காலை சென்னை வந்ததும், ஒரே சந்தோஷம் மருமகனுக்கு. அத்தை நாம விளையாடலாமா என்று கேட்டான். பரீட்சைக்கு போயிட்டு வந்து உன்கூட விளையாடுறேன் கண்ணு என்று சொன்னதும். அப்போ நானும் உன்கூட பரீட்சைக்கு வரேன் என்றான். உடனே அத்தை , சின்ன பசங்க எல்லாம் பரிச்சைக்கு வர கூடாதுன்னு சொன்னங்க தம்பி என்றார். உடனே "ஏன் ?" என்று தாணு கேட்க , அவங்க அப்பா , அத்தைக்கு கேள்விக்கு பதில் எல்லாம் சொல்லி கொடுத்திருவ இல்ல , அதனால தான் என்றார்.

தாணு அதற்கும் அசராமல் , அத்தை நான் உனக்கு சொல்லி கொடுக்காம , அமைதியா உன் மடியிலேய உட்கார்ந்துகிறேன் , என்னையும் கூட்டிட்டு போ என்றான்.. பாவம் அவன், அத்தை அப்பாக்கு தான் சங்கடமா போச்சு. சின்ன பிள்ளைகள் வரகூடாது, பிடித்து வைத்து கொள்வார்கள் என்று சமாளித்து பரீட்சைக்கு சென்றார்கள்...

-- தானேஷ் அம்மா

Saturday, June 30, 2012

குட்டி குறும்பு [3] - வயிறு என்கிட்டே சொல்லுச்சு...

தானேஷ் , தீபக்  ரெண்டு பேருக்கும், டிபன் அல்லது சாப்பாடு என்றால் ரொம்ப கஷ்டமான ஒன்று. அதே நொறுக்கு தீனி என்றால் ரொம்ப இஷ்டம்.

தீபக் இன்னும் பேச ஆரம்பிக்க வில்லை. அதனால் சாப்பாடு என்றால் வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளும். ஆனால் தானேஷ் , சமத்தாக கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போதும் என்பான். இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்றால் வயறு புல்ல் என்பான்.


அப்போ பிஸ்கட் , ஸ்நாக் கேக்க கூடாது என்றால் , தலைய குனிந்து வயிற்றின் கிட்டே வைத்து பின் நிமிர்ந்து , அம்மா வயிறு என்கிட்டே சொல்லுச்சு , தோசை சாப்பாடுக்கு உள்ள இடம் இல்லியாம். ஸ்நாக் அப்புறம் தண்ணி குடிக்க மட்டும் கொஞ்சம் இடம் இருக்காம். அதனால கொஞ்சம் ஸ்நாக் அப்புறம் தண்ணி கொஞ்சம் ஓகே வா அம்மா ? என்றான். நான் அவனை ஓர கண்ணால் பார்த்து சிரித்ததும் , ஓகே சொல்லு அம்மா என்றான். பதில் சொல்லும் வரை விட மாட்டான். அதனால் ஓகே சொல்லி விட்டேன்.


-- தானேஷ் அம்மா